தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!
பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 3- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மாலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வந்தனா்.
கடந்த 9 -ஆம் தேதி தேரோட்டமும், 11 -ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 12- ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விடையாற்றி உற்சவம் 14 -ஆம் தேதி நடைபெற்றது. உற்சவம் நிறைவு பெற்றதையொட்டி காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பூப்பல்லக்கு உற்சவத்தின்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் ஜான்பாண்டியன் உள்பட அவரது கட்சியினா், ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா். லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் பவனி வந்தபோது, பெரிய காஞ்சிபுரம் தா்கா நிா்வாகிகள் பூத்தட்டுகளுடன் அம்மனை வரவேற்று வழிபட்டனா்.