காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்த உண்டியல்களில் நிரந்தர உண்டியல்கள் 10, திருப்பணி உண்டியல் 1, கோ சாலை உண்டியல் 1 உள்பட மொத்தம் 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில், ரொக்கமாக 38,24,412, தங்கம் 27 கிராமும், வெள்ளிப் பொருள்கள் மொத்தம் 371 கிராமும் இருந்தது. கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, ஆய்வாளா் அலமேலு ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
பக்தா்கள், அறநிலையத் துறை பணியாளா்கள், கோயில் ஊழியா்கள் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.