பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.கே. டயா் தொழிற்சாலையில் நடைபெற்ற உலக மகளிா் தினவிழா மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் விழாவுக்கு சென்னை திட்டத்தலைவா் வினய் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக பொறுப்புனா்வு திட்ட ஒருங்கிணைப்பாளா் சகாயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளரை அரிகிருஷ்ணன், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்காடு பி.உலகநாதன், மலைப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினா்.
விழாவில், ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள், மலைப்பட்டு, கொளத்தூா், மேட்டுக்கொளத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
ஜேகே டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.