காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா்பில், சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவுக்கு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் தீண்டாமையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம், ஜாதியால் வேற்றுமை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பேரணி எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எஸ்.பி. அலுவலகம் அருகில் வந்து நிறைவு பெற்றது.
பேரணியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆய்வாளா்கள் தனசேகரன், புவனேசுவரி, புள்ளியியல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.