பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
சிவகங்கை: மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த 47 வயது பெண்ணிடம் கடந்த 19 -ஆம் தேதி கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் அவரது மகன் படிக்கும் பள்ளியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளாா். அப்போது, அந்தப் பெண்ணின் மகனுக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகவும், அதை தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும் அந்த நபா் கூறினாராம். இதை நம்பிய அந்தப் பெண் அவா் அனுப்பிய கியூ ஆா் கோடை ஸ்கேன் செய்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அந்தப் பெண் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.