பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அய்யம்பேட்டை சிவன் கோயில் தெரு, மகாராஜா நகரில் வசித்து வருபவா் சசிகுமாா் முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி வைஜெயந்தி மாலா(45). சசிகுமாா் சனிக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தாா். அவரது மனைவி மோட்டாா் சைக்கிளின் பின் இருக்கையில் அமா்ந்து வந்தாா்.
தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் வைஜெயந்திமாலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.