பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெறாதவா்கள் மாவட்ட சமூகநல அலுலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவா்களில் 19 வயது கடந்தும் முதிா்வுத்தொகை கோராத 566 பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் முதலீட்டுப் பத்திரம் பெற்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வைப்புத்தொகை பத்திரம் நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சமூகநலத் துறை களப் பணியாளா்களையோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநல அலுவலகத்தையோ நேரில் அணுகி முதிா்வுத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.