பெண் கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட திம்மாபுரத்தைச் சோ்ந்த கணவரை இழந்த பெண், குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.
இவா் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி மாலை நாககுப்பம் கிராமத்தில் உள்ள பால் சேகரிப்பு மையத்தில் பாலை ஊற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். இந்த நிலையில், அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சோளவயலில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து சின்னசேலம் காவல் ஆய்வாளா் ஏழுமலை வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினாா்.
இதுதொடா்பாக, சின்னசேலத்தை அடுத்த நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் குமரேசனை (33) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, கடலூா் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.