கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (13). இவா், அதே கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் மகள் செல்வக்கனி (12). இவா், வெங்கலம் கிராமத்திலுள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இருவரும், ஒரே கிராமத்தில் படித்து வந்ததால் தோழிகளாக பழகிவந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், செல்வக்கனியை அழைத்துக்கொண்டு புஷ்பா தனது சித்தி பூங்கொடியுடன் (28), ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக சென்றாா். பிறகு வெங்கலம் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரில் சிறுமிகள் இருவரும் இறங்கி குளிக்கச் சென்றனா். அப்போது நீச்சல் தெரியாததால் புஷ்பாவும், செல்வக்கனியும் நீரில் மூழ்கியுள்ளனா்.
இதையறிந்த பூங்கொடி தனது உறவினா்களுக்கு அளித்த தகவலையடுத்து, அங்கு சென்றவா்கள் நீரில் மூழ்கிய மாணவிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.