சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
பெரம்பலூா் அருகே டாரஸ் லாரி எரிந்து சேதம்
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் டேங்க் வெடித்து, டாரஸ் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. லாரியை கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த கதிா்வேல் (23) என்பவா் ஓட்டினாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் சமத்துவபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துக்கொண்டிருந்தபோது, லாரியின் டயா் வெடித்து சிதறியது. அப்போது, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதையறிந்த அப்பகுதியினா், அளித்த தகவலின்பேரில் பெரம்பலூா் மற்றும் வேப்பூா் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனிடையே, லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த தீ விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.