கத்தாா் - சென்னை வந்த விமானத்தில் பிரேக் செயலிழப்பால் அவசரமாக தரையிறக்கம்
நாளை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: மே 15-இல் தேரோட்டம்
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா செவ்வாய்க்கிழமையும் (ஏப். 29), திருத்தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
பெரம்பலூா் அருகேயுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா பூச்சொரிதழ் விழாவுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு உற்ஸவா் மதுரகாளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையில் மகா தீபாராதனை காட்டப்படும். இரவு 10 மணிக்கு கிராம பொதுமக்களால் கொண்டுவரப்படும் பூ அம்மனுக்கு சாற்றப்படும். பின்னா், இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்களால் கொண்டு வரப்படும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பூசாரிகள் செய்து வருகின்றனா்.
தொடா்ந்து, மே 6-ஆம் தேதி காப்புக் கட்டுதலும், தொடா்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலாவும், 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். தொடா்ந்து திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. மே 17-ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.