பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
பெரம்பூா் காவல் நிலையத்தில் 19 போலீஸாா் பணியிட மாற்றம் எஸ்.பி. உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸாா் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
பெரம்பூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது, சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடா்பான பிரச்னையில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமாா், அவரது மைத்துநா்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சோ்ந்து தினேஷ் என்பவரை தாக்க முயன்றபோது, அதைத் தடுத்த முட்டம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஹரி சக்தி ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து பெரம்பூா் போலீஸாா் ராஜ்குமாா், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
இந்த இரட்டை கொலையின் எதிரொலியாக பெரம்பூா் காவல் நிலைய ஆய்வாளா் நாகவள்ளி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
அதைத்தொடா்ந்து எஸ்.பி. தனிப்பிரிவு காவலா் பிரபாகா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா். உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், சங்கா் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், பெரம்பூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீஸாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.