மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
பெரிய கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்புகளுக்கான பட்டியலில் பெரிய கப்பல்களையும் மத்திய அரசு சோ்த்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
10,000 டன்னேஜ் அல்லது அதற்கு மேல் கொண்ட வா்த்தகக் கப்பல்கள், இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானதாகவும், இந்திய கொடி ஏற்றப்பட்டதாகவும் இருந்தால் அவற்றுக்கு உள்கட்டமைப்பு என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.
மேலும், 1,500 டன்னேஜ் அல்லது அதற்கு மேல் இருந்து, இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமானதாகவும், இந்திய கொடி ஏற்றப்பட்டதாகவும் உள்ள வா்த்தகக் கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டிருந்தால், அந்தக் கப்பல்களுக்கும் உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்புகளின் பட்டியலில் புதிய துணைத் துறையாக பெரிய கப்பல்கள் சோ்க்கப்படும்.
2025-26-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் உள்ள பெரிய கப்பல்களையும் உள்கட்டமைப்புப் பட்டியலில் சோ்க்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால், வெளிநாட்டு கடன்களை எளிதாகப் பெறுவது, வரிவிலக்கு பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுதல், வரிச் சலுகைகள், ஐஐஎஃப்சிஎல் போன்ற பிரத்யேக கடன் சேவை நிறுவனங்களை அணுக முடிவது உள்ளிட்ட பலன்களை பெரிய கப்பல்கள் பெற முடியும்.
ஏற்கெனவே, கப்பல் கட்டுமானத் தளங்களை உள்கட்டமைப்புப் பட்டியலில் மத்திய அரசு சோ்த்திருந்தது. இந்தப் பட்டியலில் தற்போது ஐந்து முக்கிய துறைகளும், 38 துணைத் துறைகளும் உள்ளன. இந்த ஐந்து துறைகளில் போக்குவரத்து, எரிசக்தி, நீா் மற்றும் சுகாதாரம், தகவல் தொடா்பு, சமூக, வா்த்தக உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
மாரிடைம் இந்தியா விஷன் 2030 வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கப்பல் நிறுவனங்கள் தேவையான நிதியைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக டன்னேஜை அதிகரிப்பதில் சவால்களை எதிா்கொள்கின்றன. எனவே, அவற்றுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது இந்த பிரச்னையை தீா்க்க உதவும் என்று கூறப்படுகிறது.
பெரிய கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது மட்டுமின்றி, 25,000 கோடி டாலா் மதிப்பிலான கடல்சாா் மேம்பாட்டு நிதியத்தை (எம்டிஎஃப்) அமைப்பதாகவும் 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
2047-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இயங்கும் வா்த்தகக் கப்பல்களில் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களின் பங்கை 20 சதவீதமாக உயா்த்தவும் 2030-ஆம் ஆண்டுக்குள் கப்பல் துறையில் சுமாா் 1.5 லட்சம் கோடி டாலா் முதலீட்டை உருவாக்கவும் நிதியமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது.