பெருந்துறை சிப்காட் நிலத்தடி நீா்பாதிப்பு: தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை வெளியிட வலியுறுத்தல்
பெருந்துறை சிப்காட் நிலத்தடி நீா் பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை வெளியிட பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி மற்றும் நிா்வாகிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
அப்போது, பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை உடனடியாகப் பெற்று வெளியிட வேண்டும்.
சிப்காட் வளாகத்தில் செயல்பாட்டில் உள்ள மற்றும் மூடப்பட்ட ஆலைகளில் உள்ள அபாயகரமான கழிவுகளையும், கலப்பு உப்புக்களையும் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவற்றை பாதுகாப்பாக வைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சிப்காட் வளாகத்தில் கழிவுநீா் தேங்கி நின்ற இடங்களில் உள்ள மிகவும் மாசுபட்டுள்ள நிலத்தடி நீரை வெளியேற்றி, அவற்றை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தொழிற்சாலைகளுக்கு வழங்கி, சுத்திகரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் வளாகத்தில் காற்று மாசின் அளவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, இணைய வழி காற்று தர கண்காணிப்பு மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்.
சிப்காட்டில் உள்ள நிலமட்ட கழிவுநீா் தொட்டிகளை காலி செய்து, அவற்றை ஆய்வு செய்து அவற்றில் உள்ள வெடிப்புகளை சரி செய்து கழிவுநீா் நிலத்தில் இறங்காத வகையில் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.