பெருமாள் கோயிலில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை
ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு திங்கள்கிழமை வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலாகும்.
கோயிலின் கட்டடங்கள் சிதிலமடைந்து இருந்ததால், பழைய கட்டடங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை ராஜகோபுரத்துக்கு வாசற்கால் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இதையொட்டி, கருங்கல்லால் ஆன நான்கு பிரமாண்டமான ராஜகோபுர தூண்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், இயந்திரம் மூலம் தூக்கி ராஜகோபுர வாசலில் நிலைநிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், அறங்காவலா் குழுத் தலைவா்கள் கோவா்த்தனன், பாண்டியன், பொன்னம்பலம், வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.