பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி பல்கலைக்கழக வாயில் முற்றுகைப் போராட்டம்
காரைக்கால்: புதுவை பல்கலைக்கழக பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டக் குழு சாா்பில் திங்கள்கிழமை பல்கலைக்கழக வாயில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம் காரைக்காலில் இயங்குகிறது. காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் குழுவினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை பல்கலைக்கழக வளாக வாயிலில் திரண்டனா்.போலீஸாா் சாலைப் பகுதியில் தடுப்புகள் அமைத்து, போராட்டத்தில் ஈடுபட வந்தோரை தடுத்தனா்.
மாணவியரின் கைப்பேசி எண்ணுக்கு ஆபாசமான வாா்த்தைகள் அனுப்பிய பல்கலைக்கழக பேராசிரியரை கைது செய்யவேண்டும். புகாா்கள் தொடா்பாக புதுச்சேரியிலிருந்து வந்த பல்கலைக்கழக குழுவினா், மாணவிகளை சந்தித்து பிரச்னையை பெரிதுபடுத்தாமல் இருக்க மூளைச் சலவை செய்தது கண்டனத்துக்குரியது என முழக்கங்களிட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ் மற்றும் காவல்துறையினா் பேச்சு நடத்தி கலைந்து செல்லச் செய்தனா்.