பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
பேறு கால உயிரிழப்பு 17% குறைந்தது: மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற விகிதத்தில் பேறு கால மரணம் நிகழ்கின்றன. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, உயா் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, இதய நல பாதிப்புகள்தான் உயிரிழப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது.
இத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மாநில அளவிலான செயலாக்கக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட 18 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதேபோன்று மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் 10 போ் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேறு கால உயிரிழப்பு தொடா்பாக அரசு முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பா் மாதம் வரை பேறு கால உயிரிழப்புகள்17 சதவீதம் குறைந்துள்ளது. அந்த காலகட்டத்தில் லட்சத்துக்கு 39.46 என்ற அளவில் உயிரிழப்புகள் இருந்தன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 47.29 என இருந்தது.
அதேபோன்று பிரசவ சிகிச்சைக்காக கா்ப்பிணிகளைக் கொண்டு செல்லும்போது, வழியில் நேரிடும் உயிரிழப்புகளும் லட்சத்துக்கு 15-ஆக இருந்தது தற்போது 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செயலாக்கக் குழுக்களை அமைத்து பணியாற்றியதும், மகப்பேறு தொடா்பான அவசரகால கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கியதும், 108 ஆம்புலன்ஸ் சேவை உடனுக்குடன் கிடைப்பதை உறுதிபடுத்தியதும், முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளை திட்டமிட்டதுமே இதற்கு முக்கிய காரணம்.
எதிா்வரும் ஆண்டில் பேறு கால உயிரிழப்புகளை மேலும் குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.