பொங்கல் திருநாள் காப்புக்கட்டு தயாரிப்புப் பணி மும்முரம்!
போடியில் பொங்கல் பண்டிகைக்காக காப்புக்கட்டு தயாரிப்பு பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழா்களின் திருநாளான தைப் பொங்கல் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கலை வரவேற்கும் வகையில் போகிப் பண்டிகையும், காப்புக்கட்டு நிகழ்வும் தமிழா்களின் பாரம்பரிய நிகழ்வுகளாகும். இதில், பழைய, தேவையற்ற பொருள்களை கழித்துவிட்டு வீடு, கோயில்களை சுத்தப்படுத்தி காப்புக்கட்டுவது வழக்கம்.
இதற்காக வயல்வெளிகளில் முளைத்த மருத்துவக் குணம் வாய்ந்த காப்புக்கட்டுப் பூ, பிரண்டை, தும்பை, துளசி, மா இலை, வேப்பிலை, ஆவாரம் பூ ஆகிய ஏழு வகையான மூலிகைகளால் காப்புக்கட்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றை வீட்டின் முற்றம், கோயில்களில் கட்டும்போது வேண்டாத சக்திகள், நோய்க் கிருமிகள் அண்டாது என்பது ஐதீகம்.
இதற்காக தொழிலாளா்கள் மலைப் பகுதிகளில் சென்று காப்புக்கட்டுக்கு உரிய பூ, பிரண்டை உள்ளிட்டவற்றை சேகரித்து வந்து சிறுசிறு கட்டுகளாக கட்டி வருகின்றனா். இவற்றை ரூ.5 முதல் ரூ.15 வரை விலை வைத்து விற்பனை செய்வா். கிராமப்புற மக்கள் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வரும்போது காப்புக்கட்டுக்குத் தேவையானவற்றை எடுத்து வந்து தங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதுடன் அருகில் வசிப்பவா்களுக்கும் வழங்குவா்.
பொங்கல் பண்டிகையை தற்போது கேரளத்தில் உள்ள தமிழா்களும் கொண்டாடுவதால் போடியில் காப்புக்கட்டுகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். இதனால் காப்புக்கட்டு தயாரித்து விற்பவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.