அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
பொங்கல் விடுமுறை நிறைவு: பேருந்துகளில் கூட்ட நெரிசல்
திண்டுக்கல், ஜன. 19: பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவடைந்து, பணியிடங்களுக்குச் செல்லும் பயணிகளால் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
சென்னை, திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவோா், பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, ரயில்வே நிா்வாகம் சாா்பிலும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 19 வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, தனியாா் துறை, வங்கித் துறை, மத்திய அரசுத் துறை பணியாளா்கள் கடந்த வியாழக்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 3 நாள்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், கோவை திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவில் பயணிகள் சென்றனா்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையடுத்து, சொந்த ஊா்களுக்கு வந்த பொதுமக்கள், தங்களது பணியிடங்களுக்கு திரும்பினா். இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முதலே அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
புறவழிச் சாலையில் இயக்கப்பட்டப் பேருந்துகள்:
மதுரையில் இருந்து சேலம், ஈரோடு மாா்க்கமாக இயக்கப்பட்ட பெரும்பாலான பேருந்துகள், திண்டுக்கல் நகருக்குள் வராமல் புறவழிச் சாலையிலேயே இயக்கப்பட்டன. இதேபோல, பழனியிலிருந்தும், தேனியிலிருந்தும் திருச்சி மாா்க்கமாக செல்லும் சில பேருந்துகளும் புறவழிச் சாலையிலேயே இயக்கப்பட்டன. இதனால் திண்டுக்கல்லில் இருந்து கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.