அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
பொது வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வா்த்தகம் பாதிப்பு
அகில இந்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.
பொதுத் துறைகளை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும். 74 சதவீத அந்நிய நேரடி முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரமாக்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதை ஏற்று, விழுப்புரம், திண்டிவனத்தில் ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலா்கள், ஊழியா்கள் புதன்கிழமை பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் காப்பீட்டுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. மேலும், ஊழியா்கள் வருகையின்றி அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
வா்த்தகம் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கிகளைத் தவிர, இதர தேசியமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை. மாவட்டத்தில் 210 வங்கிகளில் பணியாற்றும் சுமாா் 500 ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்ாகத் தெரிவிக்கப்பட்டது.
வங்கி அலுவலா்கள் பணிக்குச் சென்றாலும், அவா்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். போராட்டம் காரணமாக, மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.
கூட்டு ஆா்ப்பாட்டம்: வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் கூட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆா்.பாலசுப்பிரமணியம், செயலா் குணசேகரன், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலா் அமீா்பாஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் நாராயணசாமி, இதர வங்கிகளின் சங்கப் பொறுப்பாளா்கள் தண்டபாணி, காமராஜ், குமரேசன், பிரபு, கிளாட்சன், சோமசுந்தரம், இளையராஜா, ராமசாமி உள்ளிட்டோரும் பேசினா். தொடா்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
