பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா்...
போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை
பொதுத்துறை நிறுவனமாக உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல 16-ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தொழிலாளா்களுக்கு விரோதமான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அவுட்சோா்சிங் பணி முறையை ரத்து செய்ய வேண்டும். சுழற்சிமுறை பணியை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவைக் கூட்டத்துக்கு, மண்டலத் தலைவா் கே. காா்த்திக்கேயன் தலைமை வகித்தாா். பேரவையைத் தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் பேசினாா். மண்டலப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துக்குமாா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, குடந்தை மண்டலச் செயலா் ஜி. மணிமாறன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை சிறப்புரையாற்றினாா். புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சம்மேளனப் பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா் நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக பி. செந்தில்நாதன் வரவேற்றாா். ஆா். சீனிவாசன் கொடியேற்றினாா். முடிவில் வி. ஆனந்தன் நன்றி கூறினாா்.