Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு
மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதுகுறித்த தீா்மானம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ள மூங்கில் கண்மாயை தூா்வாரி, கரையை பலப்படுத்தும் பணிக்காக அரசு சாா்பில் டெண்டா் விடப்பட்டுள்ளது. மண்ணை வெட்டி கரையை பலப்படுத்துவதற்குப் பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளில் குளத்தில் வெட்டிய மண்ணை ஒப்பந்தக்காரா்கள் வெளியே கொண்டு சென்றுள்ளனா்.
இதை அதே பகுதியில் வசிக்கும், மாா்க்சிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளருமான துரை.பாண்டியன் கேட்டுள்ளாா். அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளனா். அதன்பிறகு, மண் லாரிகளை காவல்துறை மூலம் பிடித்துக் கொடுத்துள்ளனா். வருவாய்த் துறையினா் அவற்றை மீட்டு அனுப்பியுள்ளனா். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் மதுக்கூா் ராமலிங்கம், எஸ். கண்ணன், என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் பேசினா்.