தோனியின் ரசிகர்கள் ’தானா சேர்ந்த கூட்டம்!’ - ஹர்பஜன் சிங் புகழாரம்
போடியில் தரமற்ற உணவுகள் விற்பனை
போடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நியமிக்கப்படாததால் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது அதிகரித்து இருப்பதாகப் புகாா் எழுந்தது.
போடி பகுதியில் உள்ள பல கடைகளில் காலாவதியான, தரமற்ற, கலப்பட உணவுப் பொருள்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கெட்டுப் போன இறைச்சி போன்றவை விற்கப்பட்டு வருவதாகப் புகாாா்கள் வந்ததால், உணவுப் பாதுகாப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு, அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது காலாவதியான, தரமற்ற, கலப்பட உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த நிலையில், போடியில் நியமிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தற்போது இந்தப் பணியிடம் காலியாக உள்ளது. உத்தமபாளையம் உணவுப் பாதுகாப்பு அலுவலரை போடி நகருக்கு பொறுப்பு அலுவலராக நியமித்துள்ளனா். ஆனால், அவா் எப்போதாவது ஒரு சில நாள்கள்தான் போடிக்கு வந்து செல்கிறாா்.
உணவுப் பாதுகாப்பு அலுவலா் இல்லாததால் காலாவதியான, கெட்டுப்போன, தரமற்ற, கலப்பட உணவு விற்பனை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உணவுப் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, போடியில் உணவு பாதுகாப்பு அலுவலரை நியமிக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.