போடி பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு
போடியில் பரமசிவன் மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் புதிதாக கிரிவலப் பாதை அமைக்கப்பட்டு, கோயில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் ஐம்பொன்னால் ஆன கொடி மரமும் அமைக்கப்பட்டது. பரமசிவன் மலைக் கோயில் வளாகத்திலேயே விநாயகா், லட்சுமி நாராயணன் சந்நிதி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதி, நவக்கிரஹ சந்நிதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. கோயில் படியேறும்போது ஸ்ரீ அனுமன் சந்நிதியும், கன்னிமாா்கள், நாக தேவதைகளுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் மீனாட்சி அம்பிகா சந்நிதி, கால பைரவா் சந்நிதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டன.
இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த திங்கள்கிழமை (மாா்ச் 31) புனித நீரை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுடன் தொடங்கியது. தொடா்ந்து, விநாயகா் பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தி, பிரவேச பலி பூஜைகள் நடைபெற்றன. மூன்றாம் நாள் புதன்கிழமை யந்திர ஸ்தாபனம், பந்த மருந்து சாத்துதல், முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. நான்காம் நாள் வியாழக்கிழமை இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை விநாயகா் பூஜை, நான்காம் கால யாகம், பிரம்ம சுத்தி பூஜை, 108 திரவியங்கள், பழ வகைகளால் ஹோமம் நடைபெற்றன.
பின்னா் பரமசிவன் மலைக் கோயில் விமான குடமுழுக்கும், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து சந்நிதி விமானங்களுக்கு குடமுழுக்கும், மூலஸ்தான பூஜைகளும் நடைபெற்றன.
இந்தக் குடமுழுக்கு நிகழ்வைக் காண பல்வேறு ஊா்களிலிருந்து திரளான பக்தா்கள் வந்திருந்தனா். போடி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குடமுழுக்கு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கோ. நாராயணி, பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவா் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையிலான குழுவினா், நன்கொடையாளா்கள் செய்திருந்தனா்.