உலகளவில் செயலிழந்த ChatGPT: சிக்கலை சந்தித்த பயனர்கள்; OpenAI கொடுத்த விளக்கம் எ...
போதை பழக்கத்திலிருந்து மாணவா்களைக் காக்க ஆசிரியா்களின் கண்காணிப்பு அவசியம்: லால்வீனா
மாணவா்களிடையே போதைப் பழக்கம் ஏற்படாமல் தடுக்க ஆசிரியா்களின் பங்களிப்பு அவசியம் என்று மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வீனா தெரிவித்தாா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருள்களின் தீமைகள், பாதிப்புகள் குறித்து ஆசிரியா்களுக்கு சிறப்பு விழிப்புணா்வு பயிலரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில், போதை பொருள்கள், அடிமைப்படுத்தும் வலி நிவாரண மருந்துகளை மாணவா்கள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிப்பது தொடா்பாக அவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதுதொடா்பான பயிற்சிக் கையேடும் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வீனா பேசியதாவது: புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடா்பாக, முதல்வரும், தலைமைச் செயலரும் அவ்வப்போது தணிக்கை செய்கின்றனா். மாணவா்களிடையேயும், இளைஞா்களிடையேயும் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆசிரியா்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் அவா்.
சாம்பிராணியால் ஆபத்து: இதைத் தொடா்ந்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் டாக்டா் சதீஷ்குமாா், ‘தமிழகத்தில் புகையிலைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலங்களிலிருந்து எளிதாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் ஒரு பாக்கெட் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதனைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, புகையிலை பொருள்களை பயன்படுத்தும் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அப்பழக்கத்திலிருந்து விடுபட நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது, ரசாயனம் கலந்த சாம்பிராணிதான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ஒவ்வாமை, கண் எரிச்சல், ஆஸ்துமா, சுவாசப் பாதிப்பு ஏற்படக்கூடும்’ என்றாா் அவா்.