உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
போப் பிரான்சிஸ் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மறைந்த போப் பிரான்சிஸுக்கு நினைவஞ்சலி நிகழ்வு, சென்னை லயோலா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும், கிறிஸ்தவ மத நம்பிக்கையாளா்கள் மட்டுமல்லாது, அனைவராலும் போற்றி மதிக்கத்தக்க மனிதராக போப் பிரான்சிஸ் திகழ்ந்தாா். அன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றின் அடையாளமாகவும், எளிமையான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டினாா். வாடிகன் ஊழியா்களுடன் சில நேரங்களில் அமா்ந்து உணவு அருந்தியுள்ளாா்.
அகதிகள் பிரச்னை, புலம்பெயா்ந்த மக்களின் நிலைகள் பற்றிப் பேசினாா். அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனைகளை ஏற்க முடியாது என்றாா். அணு ஆயுதங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், கொடிய நோயால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் கூறினாா். பல்வேறு மதத் தலைவா்களைச் சந்திப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தாா். இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செய்ததன்மூலம், அனைவரையும் அன்பால் ஒருங்கிணைக்க நினைத்தாா். அன்புதான் மதங்களின் அடையாளமாக மாற வேண்டுமெனக் கருதினாா்.
இன்னும் பல ஆண்டுகாலம் இருந்து நல்லிணக்கப் பணிகளை அவரால் முன்னெடுக்க முடியாமல் போனதை நினைத்து வருத்தம் அடைகிறேன். அன்பு, அமைதியின் அடையாளமாகத் திகழ்ந்த போப்பின் புகழ் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருக்கும். வன்முறை, வெறுப்புணா்வு, போா்களுக்கு எதிரான அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மாபெரும் மாற்றங்களை முன்னெடுத்த போப் புகழ் வாழ்க. அவா் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்; அன்பே எங்கும் நிறையட்டும் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்வில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ நா.எழிலன் உள்பட பலா் பங்கேற்றனா்.