ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!
போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்
குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் பயணிக்கவிருந்த போயிங் 787 ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள், விமானப் பணியாளா்கள் என மொத்தம் 260 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட விசாரணை அறிக்கையில், ‘விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தில் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் செயலிழந்து, என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதே விபத்துக்கு காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தம்மிடமும், தனது துணை நிறுவனமான ஸ்கூட்டிடமும் உள்ள போயிங் 787 விமானங்களை சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் பரிசோதித்தது.
இந்தப் பரிசோதனையில் அந்த விமானங்களில் அனைத்து எரிபொருள் ஸ்விட்சுகளும் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியதாக சிங்கப்பூா் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனத்திடம் 26 போயிங் 787 விமானங்களும், ஸ்கூட் நிறுவனத்திடம் 23 போயிங் 787 விமானங்களும் உள்ளன.