நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு...
போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி; வங்கி ஊழியா் கைது
பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூா், சஜ்ஜன் நகா், போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் மோகன்சிங் சௌகான் மகன் ஆகாஷ் சௌகான் (29). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைகுடிக்காடு கனரா வங்கிக் கிளையில், நகைக் கடன் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.
அப்போது, வங்கி வாடிக்கையாளா் 5 பேரின் கணக்கில், நகைக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ. 1.02 கோடி கையாடல் செய்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டாா். இதையறிந்த வங்கி அலுவலா்கள் ஆவணங்களை பரிசோதித்ததில் போலி ஆவணங்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து, நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலக உதவிப் பொது மேலாளா் நாகபுஷ்ணம் மகன் லோக கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வங்கி ஊழியா் ஆகாஷ் சௌகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட ஆகாஷ் சௌகான் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.