`போலீஸிடம் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங் நிர்வாகியிடம் சென்றது எப்படி?’ - கதறி அழுத அரக்கோணம் மாணவி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர்மீது வன்கொடுமைப் புகார் அளித்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கு டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை 4 மணியளவில் சென்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், ``பாதிக்கப்பட்ட தன்னையே போலீஸார் குற்றவாளிபோல நடத்துகின்றனர்...’’ என்று மாணவி வீடியோ வெளியிட்டிருப்பது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
வீடியோவில், ``டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்து இரண்டு நாள்கள் ஆகின்றன. இதுவரை காவல் நிலையத்தில் இருந்து சி.எஸ்.ஆர் நகலோ அல்லது தெய்வச்செயல் மீதான எஃப்.ஐ.ஆரை மாற்றிப் போட்டதற்கான நகலோ எனக்குத் தரவில்லை.

19-5-2025 (அதாவது நேற்று) இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காலை 11.30 மணிக்கு எனக்குப் போன் செய்து, `உன்கிட்ட ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்’ என்றார். மாலை 4 மணிக்கு என்னோட வீட்டுக்கு வந்த போலீஸார் இரவு 7.30 மணிவரை ஸ்டேட்மெண்ட் எடுத்தார்கள். பாதிக்கப்பட்ட என்னுடைய தரப்பில் இருந்து ஸ்டேட்மெண்ட் பதிவுசெய்யப்படவில்லை. `ஸ்டேட்மெண்ட் குறித்து வெளியே சொல்லக்கூடாது’ என்றும் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அதில், எனக்கு உடன்பாடு இல்லை.
நானா பிடித்துகொடுக்க முடியும்?
டி.எஸ்.பி ஜாபர் சித்திக்கும் 5.30 மணிக்கு என்னுடைய வீட்டுக்கு வந்தார். `20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக சொல்கிறாயே, அந்தப் பெண்கள் யார் யார்?’ என்று என்னிடமே கேள்விக்கேட்டார். எந்தெந்த பெண்கள் என்று நானா பிடித்துகொடுக்க முடியும். குற்றவாளியின் போன் நெம்பரை ஆய்வு செய்யுங்கள். அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். 20 பெண்களா அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களா என்பதும் தெரியவரும் என்று டி.எஸ்.பி-யின் கேள்விக்குப் பதில் சொன்னேன்.

அதுவுமில்லாமல், போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் எப்படி சென்றது? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். ஒருப் பெண் தைரியமாக வெளியில் வந்து புகார் தருவதே அரிது. அப்படியிருக்கும்போது, எனக்கு முதலில் இருந்த தைரியம் இப்போது சுத்தமாகக் கிடையாது.
தவறு செய்த தெய்வச்செயல் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். ஏதோ, நான் குற்றவாளி மாதிரி போலீஸார் நடந்துகொள்கிறார்கள். பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே கிடையாதா? தற்கொலை செய்துகொள்வேனோ என்று பயமாக இருக்கிறது. பொதுமக்கள்தான் நீதி வாங்கித் தரவேண்டும்’’ என்றார் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி.