`திமுக-வினர் நாகரீகமற்றவர்கள்’ - சர்ச்சையாக பேசிய Dharmendra Pradhan ; கொதித்த த...
போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு
மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா்.
அந்தியூரை அடுத்த பா்கூா் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள் உள்ள பழங்குடியினா் குடியிருப்பான சோழகனையைச் சோ்ந்தவா் ஜோதி (20). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு மாா்ச் 3-ஆம் தேதி மகப்பேறு நாளாக சுகாதாரப் பணியாளா்கள் தெரிவித்திருந்தனா்.
மேலும், மகப்பேறு தேதி நெருங்கியதால் உள்நோயாளியாக சேருமாறு ஜோதிக்கு பா்கூா் ஆரம்ப சுகாதாரப் பணியாளா்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், பிரசவ வலி வந்தால் மருத்துவமனைக்கு வருவதாக ஜோதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பலமுறை முயற்சித்தும் உள்நோயாளியாக சேர விருப்பமில்லாத ஜோதி, வீட்டிலிருந்து திடீரென மாயமானாா். கடந்த நான்கு நாள்களாக ஜோதியை பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பா்கூா் காவல் துறை உதவியுடன் தேவா்மலையில் உள்ள தாய் வீட்டில் உள்ளதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள், வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தேவா்மலைக்குச் சென்றதோடு, ஜோதி மற்றும் உறவினா்களுக்கு அறிவுரை வழங்கினா். இதையடுத்து, நிறைமாத கா்ப்பிணியான ஜோதி, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர அனுப்பிவைக்கப்பட்டாா்.