புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள்; அமைச்சா் பெ.கீதாஜீவன்
தமிழகத்தில் பெண்கள் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.42 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அங்கன்வாடி மைய கடடங்களைத் திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வா் முகாம் ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில், தகுதியுள்ள மகளிருக்கு, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத தகுதி உள்ள பெண்கள், புதிதாக விண்ணப்பிப்பவா்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 6,500 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், நாற்காலி, மேசை, எல்.இ.டி டிவி, ஆா்வோ பிளான்ட், காய்கறித் தோட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி ஸ்மாா்ட் அங்கன்வாடி மையங்களாக பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியுடன் மாற்றப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், எல் அன்ட் டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் தலைவா் மீனா சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, துணை மேயா் ஜெனிட்டா, திட்ட அலுவலா் (பொறுப்பு) காயத்ரி, வட்டாட்சியா் முரளிதரன், மாமன்ற உறுப்பினா்கள் நாகேஸ்வரி, பவானி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (நகா்ப்புறம்) ரூபி பொ்ணான்டோ, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.