மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.
பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பூடான் அரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக இன்று லக்னெள விமான நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.
இந்த நிலையில், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான விடியோக்கள், புகைப்படங்களையும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.
இதையும் படிக்க: பொது சிவில் சட்டம்: 5 பேர் குழு அமைத்தது குஜராத் அரசு!
வசந்த பஞ்சமி நாளான நேற்று(பிப். 3) ஒரே நாளில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினர்.
மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடைள்ளது.
இதில் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.