மகா கும்பமேளா: 73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.
இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் அவா்கள், மகா கும்பமேளா எண்ம கண்காட்சியையும் பாா்வையிட உள்ளதாக மகா கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தாா்.
தூதா்களின் வருகை தொடா்பாக, உத்தர பிரதேச தலைமைச் செயலருக்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தூதா்களுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.