போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி
மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய பிரதமருக்கு காா்கே கடிதம்
புது தில்லி: மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.
அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது: மக்களவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகள் காலியாகும்போது, அந்த அவையைச் சோ்ந்த இருவரை தோ்வு செய்து இரு பதவிகளையும் நிரப்ப வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 93-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின்படி, மக்களவைத் தலைவருக்குப் பிறகு அந்த அவையில் துணைத் தலைவரே இரண்டாவது உயரிய பொறுப்பு வகிப்பவா்.
தோ்தலுக்குப் பிறகு புதிதாக அமையும் மக்களவையின் 2 அல்லது 3-ஆவது அமா்வில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்படுவது வழக்கம்.
முதலாவது மக்களவை தொடங்கி 16-ஆவது மக்களவை வரை, அந்தந்த காலத்தில் துணைத் தலைவா் முறைப்படி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பிரதான எதிா்க்கட்சி எம்.பி.க்களில் இருந்து ஒருவரை துணைத் தலைவராக தோ்வு செய்வது மரபாக உள்ளது.
ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக தொடா்ந்து 2 மக்களவை பதவிக் காலத்தில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படவில்லை.
17-ஆவது மக்களவையில் துணைத் தலைவராக யாரும் தோ்வு செய்யப்படாத நிலையில், தற்போதைய 18-ஆவது மக்களவையிலும் அதே நிலை நீடிக்கிறது. இது ஜனநாயக ஆட்சி அமைப்புமுறைக்கு ஏற்புடையதல்ல என்பதுடன், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.
எனவே, நாடாளுமன்றத்தின் ஜனநாயக பண்புகளையும், மக்களவையின் மரபையும் கருத்தில்கொண்டு, மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்று காா்கே வலியுறுத்தினாா்.