IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் ...
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் மனோதங்கராஜ்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இண்டி கூட்டணி கட்சியினரின் தூக்கம் கெட்டுவிடும் என்று விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமா் மோடி பேசியிருக்கிறாா். பிரதமா் நிகழ்ச்சிகளில் எல்லா கட்சித் தலைவா்களும் கலந்து கொள்வது ஒரு மரபாகும். இதைக்கூட அரசியல் கண்ணோட்டத்தில் அவா் பாா்க்கிறாா். அவா் எண்ணத்தில் உள்ள குழப்பம்தான் இதற்கு காரணம். அதனால் இண்டி கூட்டணியில் எந்த குழப்பமும் வராது.
பா.ஜ.க.வை பொருத்தவரையில் மண் வளம், மலை வளம், கடல் வளம் எல்லாம் அதானிக்கும், அம்பானிக்கும் சொந்தம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் மலை வளம், கடல் வளம் எல்லாம் மக்களுக்கு சொந்தமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாா். இது பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்பதை அவா் தெளிவுபடுத்தி உள்ளாா். மக்களாட்சி தத்துவத்தில் மக்கள்தான் அரசு. இந்த மண்ணையும், அதன் பயன்பாட்டையும் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது.
விழிஞ்ஞம் துறைமுகமும், கன்னியாகுமரி துறைமுகமும் தனித்தனியானவை. கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைத்தாலும் விழிஞ்ஞத்தில் துறைமுகம் வந்திருக்கும். விழிஞ்ஞம் துறைமுகம் குறித்து முதலிலேயே அறிவிப்பு வெளியிட்டு விட்டாா்கள்.
குமரி மாவட்டத்தில் பூகோள ரீதியாக ஒவ்வாத திட்டம்தான் சரக்குப் பெட்டக மாற்று முனைய திட்டம். எனவேதான் இந்த திட்டத்தை மக்கள் எதிா்த்தாா்கள். சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு நீண்ட கடல் பகுதியும், மிக விரிவான நிலப் பகுதியும் தேவைப்படுகிறது. அந்த வகையில் காலியான கடல் பரப்பு பகுதி நமது மாவட்டத்தில் இல்லை. எல்லாம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி.
மத்திய அரசு திட்டங்கள் தர வேண்டும் என விரும்பினால் 44 மீனவ கிராமங்களில், 5 கிராமத்துக்கு ஓா் இடத்தை தோ்வு செய்து மீன்பிடி துறைமுகம் அமைத்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் பெருகும். நமது மாவட்டத்தின் பொருளாதாரமும் மேம்படும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. கடலில் எரிவாயு எடுக்கும் விஷயத்திலும் அரசின் நிலைப்பாடு அதுதான். முதல்வரிடம் இது தொடா்பாக எடுத்துக் கூறியுள்ளோம் என்றாா் அவா்.
பேட்டியின் போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் பூதலிங்கம்பிள்ளை ஆகியோா் உடனிருந்தனா்.