மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கையிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயல் திட்டத்தின்படி, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரு உறுப்பினா்கள் பணியிடத்துக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதற்கு, பொதுமக்கள் தொடா்புடைய துறைகளான போக்குவரத்துத் துறை, தபால் தந்தி, தொலைத் தொடா்புத் துறை, மின்சாரத் துறை, மருத்துவத் துறை, காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத் துறைகள், அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலா் 62 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் பெயா், பாலினம், முகவரி, கல்வித் தகுதி, பணியின் விவரம், பணியில் சோ்ந்த நாள், பணி ஒய்வு பெற்ற நாள், பணியாற்றிய காலம் போன்ற விவரங்களுடன் செயலா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சட்ட உதவி மையக் கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை -630562 -என்ற முகவரிக்கு, வரும் 20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம் என்றாா்.