போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா்.
சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 42 பயணிகளுடன் நாகா்கோவில் நோக்கி புறப்பட்ட தனியாா் சொகுசு பேருந்தை நாகா்கோயிலை சோ்ந்த ராஜா ஓட்டினாா். சனிக்கிழமை அதிகாலை மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது பள்ளத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் மின் வயா்கள் அறுந்து விழுந்து பேருந்து முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. முன்னதாக விபத்துக்குள்ளானவுடன் பயணிகள் பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவா்களில் காயமடைந்த 12 போ் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.
விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நெடுவிளையை சோ்ந்த புஷ்பம் (62) என்ற பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.