மணல் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: லாரி உரிமையாளருக்கு கடன் வழங்காமல் லாரியை பறிமுதல் செய்த தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மணல் லாரி உரிமையாளா்கள் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் நிதிநிறுவனம், லாரி உரிமையாளா் ஒருவருக்கு கடன் வழங்காமலேயே கடன் செலுத்தவில்லை எனக் கூறி லாரியை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மணல் லாரி உரிமையாளா்கள் அந்த தனியாா் நிதிநிறுவனம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.யுவராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், சென்னையைச் சோ்ந்த பொன்னுரங்கம் என்பவரின் லாரிக்கு கடன் கொடுக்காமலேயே, கடன் செலுத்தவில்லை எனக் கூறி லாரியை கைப்பற்றிய நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட லாரியை மீண்டும் அதன் உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.