மணிப்பூா்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம் - பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்
மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் இரு குகி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
குகி தேசிய அமைப்பு (கேஎன்ஓ), ஐக்கிய மக்கள் முன்னணி (யுபிஎஃப்) ஆகிய அந்த இரு குழுக்களும், மாநிலத்தில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து தங்கள் முகாம்களை வேறு இடத்துக்கு மாற்றவும் ஒப்புக்கொண்டுள்ளன. குகி தேசிய அமைப்பின்கீழ் 16 குழுக்களும், ஐக்கிய மக்கள் முன்னணியின்கீழ் 7 குழுக்களும் செயல்படுகின்றன.
பிரதமா் மோடி அடுத்த வாரம் மணிப்பூா் பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வழிவகுக்கும் வகையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-இல் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு, வன்முறை தொடா்ந்தது. 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், வீடுகளைவிட்டு வெளியேறிய லட்சக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க அனைத்துத் தரப்புகளுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது. குகி தேசிய அமைப்பு (கேஎன்ஓ), ஐக்கிய மக்கள் முன்னணி (யுபிஎஃப்) ஆகிய 2 குகி-ஜோ பழங்குடியின குழுக்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தில்லியில் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா். இக்கூட்டத்தின் நிறைவாக, குகி-ஜோ குழுக்கள், மத்திய - மணிப்பூா் அரசுகள் இடையே மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அடிப்படை விதிமுறைகளின்கீழ் ‘நடவடிக்கை நிறுத்த’ முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.
முக்கிய அம்சங்கள்: அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும், நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தீா்வை நோக்கிப் பணியாற்றவும் குகி அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன.
பதற்றத்துக்குரிய இடங்களில் இருந்து தங்கள் முகாம்களை வேறு இடத்துக்கு மாற்றவும், இந்த முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களை பாதுகாப்புப் படை மையங்களில் ஒப்படைக்கவும், கிளா்ச்சியாளா்களில் வெளிநாட்டினா் யாரேனும் உள்ளனரா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையின் தீவிர உறுதிப்படுத்துதல் பணிக்கு ஒத்துழைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
அடிப்படை விதிமுறைகளின் அமலாக்கத்தை கூட்டுக் குழு மூலம் உன்னிப்பாக கண்காணிக்கவும், விதிமீறல்களைக் கடுமையாக கையாளவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?: மேற்கண்ட குழுக்களுடன் முதல் முறையாக கடந்த 2008-இல் அமைதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு, பின்னா் நீட்டிக்கப்பட்டு வந்தது. இனமோதல் எதிரொலியாக கடந்த ஆண்டில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இப்போது மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளின்கீழ் புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இரு குழுக்களும் வன்முறை மற்றும் தாக்குதல்களை முழுமையாகக் கைவிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்; உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேறெந்த ஆயுதக் குழுவுடனும் தொடா்பு வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும் வரை இரு குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘தேசிய நெடுஞ்சாலை 2-இல் போக்குவரத்தை அனுமதிக்க முடிவு’
தேசிய நெடுஞ்சாலை 2-இல் பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க குகி-ஜோ கவுன்சில் வியாழக்கிழமை ஒப்புக் கொண்டது. மத்திய அரசுடன் மேற்கொண்ட தொடா் பேச்சுவாா்த்தைகளின் விளைவாக, இந்த முடிவை குகி-ஜோ கவுன்சில் மேற்கொண்டது. தேசிய நெடுஞ்சாலையில் அமைதியைப் பராமரிக்க பணியமா்த்தப்படும் பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் உறுதியளிக்கப்பட்டது.
தாங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து குகி-ஜோ குழுக்களின் முகாம்கள் இடம் மாற்றப்பட வேண்டும்; தேசிய நெடுஞ்சாலை 2-இல் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது மைதேயி சமூகத்தினரின் முக்கியக் கோரிக்கைகளாகும்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகினாா். இதையடுத்து, சட்டப்பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. மாநில ஆளுநராக அஜய் குமாா் பல்லா பதவி வகித்து வருகிறாா்.