மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்
மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை விசைப் படகுடன் இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னா், இந்த மீனவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களை வருகிற 17-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மண்டபம் மீனவா்கள் சங்கம் சாா்பில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால், 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி இறங்குதளங்களிலேயே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.