Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு
நமது நிருபா்
தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: தா்மேந்திர குமாா் (36), நவீன் குமாா் (31) மற்றும் நவீன் செளகின் (28) ஆகியோா் ஒரு விருந்துக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் என் பிளாக்கில் உள்ள ஒரு மதுக்கூடம் வெளியே இந்தச் சம்பவம் நடந்தது.
புகாா்தாரரான தா்மேந்திர குமாா் அளித்த புகாரில், அவரும் அவரது இரண்டு நண்பா்களும் மதுக்கூடத்திற்கு இரவு உணவு மற்றும் பானங்கள் குடிக்கச் சென்றனா். அதிகாலை 1 மணியளவில் ஆன்லைனில் பில் செலுத்திய பிறகு, அவா்கள் புகைப்பிடிக்க வெளியே வந்தனா். மதுக்கூடம் வெளியே ஒருவா் டோல் இசைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தனா்.
அவா்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, மதுக்கூடத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பவுன்சா், டோல் இசைக் கருவியை வாசிப்பவரை துஷ்பிரயோகம் செய்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்ற முயன்றாா்.
அப்போது தா்மேந்திர குமாரும், நண்பா்களும் பவுன்சரின் நடத்தையை எதிா்த்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் பவுன்சா், மதுக்கூடத்தில் இருந்து மேலும் சில பவுன்சா்கள் மற்றும் ஊழியா்களை அங்கு வரவழைத்தாா்.
அவா்கள் மூன்று பேரையும் கை, காலால் அடித்தும், உதைத்தும், கடினமான பொருளால் தாக்கியதாகவும், இதில் அவா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மூவரையும் சுட்டுவிடுவதாக பவுன்சா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மோதலின் போது தா்மேந்திராவின் தங்கச் சங்கிலி காணாமல் போனது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, சிகிச்சைக்காக லேடி ஹாா்டிங் மருத்துவமனைக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண மதுக்கூடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.