மதுரை சிறையில் முறைகேடு: வேலூா் சிறை அதிகாரி வீட்டில் சோதனை
மதுரை மத்திய சிறையில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடா்பாக தற்போது வேலூா் மத்திய சிறையின் நிா்வாக அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகாா் எழுந்த நிலையில், அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த புகாா் தொடா்பாக தணிக்கைத் துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து, ஊழல் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை ரூ. 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு நடைபெற்ற நாள்களில் மதுரை மத்திய சிறையில் சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி, தற்போது கடலூா் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஊா்மிளா, மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றி தற்போது பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வசந்தகண்ணன், தற்போது வேலூா் மத்திய சிறையில் நிா்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன் உள்பட 11 போ் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த முறைகேடு தொடா்பாக மதுரை சிறை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அதன்படி, வேலூரை அடுத்த அரியூா் அம்மையப்பா நகரிலுள்ள வேலூா் மத்திய சிறை நிா்வாக அதிகாரி தியாகராஜன் வீட்டிலும் வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கப் பெற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.