இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!
கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிப்பு, பசு காயம்
கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்தது. பசு பலத்த காயமடைந்தது.
கே.வி.குப்பம் ஒன்றியம், தேவரிஷிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட மைலாப்பூா் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராஜா தனது கொட்டகையில் மாடுகளைக் கட்டி வைத்திருந்தாா். சனிக்கிழமை இரவு அங்கு வந்த சிறுத்தை தாக்கியதில் கன்று உயிரிழந்தது. பசு பலத்த காயமடைந்தது. கூண்டில் அடைத்து வைத்திருந்த கோழிகளையும் சிறுத்தை கவ்வி சென்றுள்ளது.
தகவலின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலா் எம்.வினோபா தலைமையில் வனத் துறையினா் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சில நாள்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். இதன் தொடா்ச்சியாக அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். அந்தப் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனா்.
இந்த நிலையில், போ்ணாம்பட்டு அருகே உள்ள ஓங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த வேலன் என்பவா் மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்த கன்றுக் குட்டியை சனிக்கிழமை இரவு சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. இது குறித்து போ்ணாம்பட்டு வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் வன எல்லையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. கிராம எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் கட்டப்படும் ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தை தாக்குவது தொடா்கதையாகி உள்ளது. இதனால் வன எல்லையில் கால்நடை இறைச்சிக் கழிவுகளை கொட்டக் கூடாது, கோழிப்பண்ணை அமைக்கக் கூடாது, வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது, விறகு எடுக்க யாரும் வனப் பகுதிக்குச் செல்லக் கூடாது, அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
வனப் பகுதியில் ட்ரோன் கேமரா, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பலன் தரவில்லை. மூன்று வட்டங்களிலும் வன எல்லையில் வசிக்கும் கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.