இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!
வேலூா் அருங்காட்சியத்தில் ‘கலைஞா் 100’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்
வேலூா் கோட்டை அரசு அருங்காட்சியத்தில் ‘கலைஞா் 100’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த ஓவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் பாரம்பரிய, நவீன ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஓவிய நுண்கலைக் குழு நிதியுதவியுடன் கலைஞா் 100 என்ற தலைப்பில் ஓவியா் ரா.காயத்ரியின் ஓவியக் கண்காட்சி வேலூா் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சி.நீலமேகன் தலைமை வகித்தாா். சத்துவாச்சாரி தனலட்சுமி தஞ்சாவூா் ஓவியக் கூடம் இயக்குநா் சி.செல்வகணேஷ் வரவேற்கிறாா். வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓவிய கண்காட்சியைத் தொடங்கி வைத்தனா்.
இந்த கண்காட்சியில் கலைஞா் 100 என்ற தலைப்பில் ஓவியா் ரா.காயத்ரி வரைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த 100 ஓவியங்களுடன், தஞ்சாவூா் ஓவியங்கள், கேன்வாஸ் ஓவியங்கள், சிறப்பம்சமாக 25 விதமான பறவைகளின் ஓவியங்களைக் கொண்டு மனித உருவம் குறித்த ஓவியம் என சுமாா் 150 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஓவிய கண்காட்சியை ஜனவரி 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வடஆற்காடு ஓவியா் சங்க தலைவா் நா.சௌந்திரராஜன், மாமன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.கணேஷங்கா், ஜெ.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் நன்றி கூறினாா்.