HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரம...
மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல்!
மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தின் காரணமாக, நிதி நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
கடந்த 1886- ஆம் ஆண்டு முதல் நகராட்சி நிா்வாகமாக செயல்பட்டு வந்த மதுரை, 1971- ஆம் ஆண்டு மே மாதம் முதல் மாநகராட்சியாக செயல்பட தொடங்கியது. மாமன்றத்தின் முதல் மேயராக எஸ். முத்து தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, 1974-ஆம் ஆண்டு மாநகராட்சி நிா்வாகத்துடன் 13 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இதனால், வாா்டுகள் எண்ணிக்கை 48-லிருந்து 65- ஆக உயா்த்தப்பட்டன. பின்னா், 1991-ஆம் ஆண்டு வாா்டு சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், மதுரை மாநகராட்சியில் வாா்டுகளின் எண்ணிக்கை 72 ஆகவும், 2011- ஆம் ஆண்டு எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 100 வாா்டுகளாகவும் உயா்த்தப்பட்டன.
மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்தியம் என 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, 147.97 ச.கி.மீ. பரப்பரளவில் ஏறத்தாழ 14.62 லட்சம் போ் வசித்து வந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 20 லட்சம் மக்கள் வசித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அருகாமையில் உள்ள பரவை பேரூராட்சி, கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, செட்டிகுளம், கோவில் பாப்பாகுடி, ஆலாத்தூா், பேச்சிக்குளம், விரகனூா், நாகமலைப் புதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி, அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி, அரும்பனூா், கொடிக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைத்து தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கடந்த டிச. 31- இல் அறிவிப்பு வெளியிட்டது.
இது மாநகராட்சியுடன் இணைப்பு பெறும் பகுதிகளில் வசித்து வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த 2011- இல் மாநாகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான வண்டியூா், அண்ணாநகா், கோமதிபுரம், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, சாலை வசதிகள் அமைக்கும் பணிகள் தற்போதுதான் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மதுரை மாநகர மக்களின் குடிநீா்த் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 2018- ஆம் ஆண்டு தொடங்கிய முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் இன்னும் 60 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது ரூ.1,600 கோடியை எட்டியுள்ளது.
குடிநீா், புதை சாக்கடை குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. நிதி நெருக்கடி காரணமாக அவற்றை சீரமைப்பது கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், தற்போது மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தால் நிதி நெருக்கடி ஏற்பட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது:
ஏற்கெனவே எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு இதுவரை குடிநீா், புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சொத்து வரி, குடிநீா் உள்ளிட்ட வரி விதிப்புகளுக்கு வேண்டுமானால் மாநகராட்சி நிா்வாகத்துக்கு சாதகமாக அமையுமே தவிர, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவதில் சிக்கல் ஏற்படும். அண்மைக் காலங்களில் பெய்த சிறு மழைக்கே மாநகரின் முக்கியச் சாலைகள் சேதமடைந்தன. இதுமட்டுமன்றி, மழை நீரும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து விட்டன. இதை அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் போதிய நிதியின்றி தமிழக அரசின் உதவியை எதிா்பாா்க்க வேண்டியிருந்தது.
தற்போதைய எல்லை விரிவாக்கத்தின் காரணமாக மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துமே தவிர, அனைத்து பகுதியில் வசித்து வரும் மக்களுக்கும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலையே தொடரும். இதனால் மாநகராட்சியுடன் இணைப்பு பெறும் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அவதிப்பட நேரிடும் என்றனா் அவா்கள்.