மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கள ஆய்வு தொடக்கம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் அர்ஜூனன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுரங்கப் பாதைகள், ரயில் நிலையங்கள், சந்திப்புகள் அமையும் இடங்கள் குறித்து மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜூனன் கள ஆய்வு மேற்கொண்டார்.
இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம், ஆண்டாள்புரம் வரை கள ஆய்வு நடக்கிறது. மெட்ரோ ரயில் சேவைக்கான சுரங்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையம் ஆர்ஜுனன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
மதுரையில் 11,368 கோடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, திட்டப் பாதையின் பல்வேறு பகுதிகளில் மண் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் என்பது, திருப்பரங்குன்றம்-மதுரை- ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மெட்ரோ திட்ட செயலாக்கம் குறித்து பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. மெட்ரோ ரயில் பாதை வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அழகா் வைகையில் இறங்கும் வைபவத்துக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு, வைகை ஆறு பகுதியில் பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, மதுரை வைகை ஆற்றில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணியும் நடத்தப்பட்டது. துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுள்ளன.