அண்ணா பல்கலை. விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை!
ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆலோசனை!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆலோசனை நடத்தியது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்படி, ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், மாணவியின் தகவல்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியே கசிந்ததற்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிக்க | 'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்'
இதைத் தொடர்ந்து நேற்றிரவு சென்னை வந்த தேசிய மகளிர் ஆணையக் குழு இன்று(திங்கள்) காலை அண்ணா பல்கலைக்கழகம் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
மம்தா குமாரி தலைமையிலான தேசிய மகளிர் ஆணையக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கிண்டியில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?