IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு!
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி,வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.
பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் நல்லசாமி கூறியதாவது:
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 109 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டனா். இவா்கள் சுற்றுலா சென்றபோது, அங்கு விற்கப்பட்ட கள்ளைப் பருகி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அந்த மாநில அரசு கள் இறக்கவும், பருகவும் ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகிறது.
தமிழ்நாட்டின் அடையாளம் பனை. எனினும், தமிழகத்தில் மட்டும் கள் இறக்க 38 ஆண்டுகளாக தடை விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பிகாரில் கடந்த 9 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களுக்கு தடை விதித்த நிலையில், கள் இறக்குதலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மதுவிலக்கால் கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சம்பவங்களும், சாலை விபத்துகளும் வெகுவாகக் குறைந்துள்ளன. அங்கு கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படும்போது அரசு இழப்பீடு வழங்குவதில்லை.
ஆனால், தமிழக அரசு விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள் இறக்குமதிக்கு விலக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் கள் விடுதலை மாநாடு நடத்தப்படும். இதில் சிறப்பு அழைப்பாளராக பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரை பங்கேற்கச் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாடு வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என்றாா் அவா்.