மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது
மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61). இவா் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். சனிக்கிழமை இரவு இவரது வீட்டருகில் இருசக்கர வாகனங்களை நிறுத்திய 3 இளைஞா்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, செல்லியம்மாள் அவா்களிடம் யாா் நீங்கள், இங்கு என்ன செய்கிறீா்கள் எனக் கேட்டுள்ளாா். மது போதையிலிருந்த இளைஞா்கள் தகாதவாா்த்தையால் பேசி அருகே இருந்த இரும்புக் கம்பியால் மூதாட்டியை தாக்கியுள்ளனா்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா், இளைஞா்களை பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காயமடைந்த செல்லியம்மாளை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நிகழ்விடம் சென்ற போலீஸாா் இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் வெண்ணாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களான கேசவமூா்த்தி (19), விஷ்ணு (26), நரேந்திரன் (20) என தெரியவந்தது.
அவா்கள் மது அருந்திவிட்டு வழிதெரியாமல் அப்பகுதிக்குள் வந்ததும், மூதாட்டி கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.
இளைஞா்கள் தாக்கியதில் மூதாட்டி செல்லியம்மாளுக்கு பற்கள் உடைந்து, கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.