மத்திய அரசின் பங்களிப்புடன் புதுவையில் மறு நில அளவை செய்வதற்கான பணி தொடக்கம்
புதுச்சேரி: புதுவை யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் மறு நில அளவை செய்வதற்கான பணி தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் உள்ளவா்களுக்கு வரும் 23-ஆம் தேதி அங்குள்ள திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் ஆவணங்கள் சரிபாா்க்கப்படுகின்றன.
இதுகுறித்து புதுவை அரசின் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1970-களில் நடந்த நில அளவைகள்தான் தற்போது நடைமுறையில் உள்ளன. இதை மேம்படுத்தும் நடவடிக்கையாக மறு நில அளவை செய்யப்படுகிறது.
இதற்காக கடந்த மாா்ச் மாதம் இந்திய சா்வே துறை ஏற்பாட்டின்படி புதிய நில அளவை செய்வதற்காக ட்ரோன் சா்வே செய்யப்பட்டது. அப்படி எடுக்கப்பட்ட வரைபடங்கள் தற்போதுள்ள புலப்படங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரித் திட்ட ஆவணங்களில் கண்டறியப்படும் குறைகளை நிவா்த்தி செய்து நில உரிமையாளா் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். பின்னா், உரிய ஆவணங்களின் அடிப்படையில் புதிய உட்பிரிவுகள் செய்து பட்டா மாற்றம் செய்யப்பட்டு, அதற்குரிய ஆவணங்கள் உடனுக்குடன் உரியவா்களுக்கு வழங்கப்படும்.
எனவே, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் நிலம், வீடுகள், கட்டடங்கள் வைத்திருப்போா் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி தங்கள் விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.